Thursday, October 11, 2012

CATCH A CAT


   
பூனை பிடிப்பது எப்படி?


      1988 என்று நினைக்கிறேன்...... கெடா மாநிலத்திலுள்ள பாலிங் என்னும் ஊரிலுள்ள முருகன் கோயிலில் சொற்பொழிவாற்ற அழைத்தார்கள்.
      ஆனால் சொற்பொழிவுக்குத் தலைப்பை, கோயிலாளர்களும்
கொடுக்கவில்லை; நானும் ஏதும் தயார்செய்துகொண்டு செல்லவில்லை.
      கோயிலில் சொற்பொழிவை ஆர்ம்பிக்கப்போகும்போது, எதைப் பற்றி பேசவேண்டும் என்று கேட்டேன். அவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. முழிமுழியென்று முழித்தபின்னர், 'எதுனாச்சும் பேசுங்க டாக்டர். ஒங்க இஷ்டம்', என்று சொல்லிவிட்டார்கள்.
      முழிமுழியென்று முழிப்பது இப்போது என்னுடைய முறையாகி
விட்டது. 
      அந்தச் சமயம் பார்த்து பூனை ஒன்று, கூட்டத்திற்குள் நுழைந்து
சென்றது. ருத்திராட்சப் பூனை அல்ல. ஏதோ ஒரு சராசரி கோயில் பூனைதான்.      
      யாரோ ஒருவர், 'பூனையப் புடிச்சு அந்தாண்டை வுடுங்க', என்றார்.
இன்னொருவர் எழுந்து பூனையைப்பிடிக்க முயன்றார். ஆனால் அதுவோ
டேக்கா கொடுத்துவிட்டு இன்னொருபக்கம் போய்விட்டது.
      "பூனையப் பிடிக்கிறதுக்குக்கூட டெக்னிக் தெரிஞ்சிருக்கணும்", என்று 
விளையாட்டாகச் சொன்னேன்.
      அப்போதுதான் மின்னல்போல் தோன்றியது.
      இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்களே, அதுதான்.
      'இப்போது நான் 'பூனையைப் பிடிப்பது எப்படி?' என்பதையே
தலைப்பாக வைத்துப்பேசுகிறேன்', என்று ஆரம்பித்தேன். கூட்டத்தினர்
குழம்பிப்போய் பார்த்தனர். விளையாட்டாகச் சொல்கிறேனா, என்ன என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்றும் சொல்ல வில்லை. சொல்வதற்கு அந்தக்காலத்தில் யாருக்குத்தான் தைரியம் இருந்தது?:-)
      ஒன்றரை மணி நேரம் பேசினேன். 'மார்ஜாரக்கிசோர நியாயம்,
மர்க்கடக் கிசோர நியாயம்', எனப்படும் சரணாகதித் தத்துவங்களின் விளக்கமாக அந்த சொற்பொழிவு அமைந்தது. அந்த சொற்பொழிவில் வைணவம்தான் முக்கியத்தளம் என்றாலும், ஏசுநாதரும் தலையைக் காட்டிப்போனார். சரணாகதித் தத்துவத்தை மிக அழகாகவும், தெளிவாகவும், நறுக்குத்தெறித்தார்ப்போலவும் சொன்னவரல்லவா
அவர். 
      நடுவில் யானை பிடிப்பதைப்பற்றியும் ஒரு கொசிறு செய்தியைப்
போட்டுவைத்தேன். கெடாKedah மாநிலமல்லவா! ஆகவே ஒரு சிறிய 
சிலேடையில் புகுந்துவிளையாட வாய்ப்புக்கிடைத்தது. யானைப் பிடிக்கும் 'கெடா(Kedda) முறையைபற்றி சொல்லிவைத்தேன்:-) அந்தக் காலங்களில் சொற்சிலம்பம் ஆடுவதென்றால் மிகவும் பிடிக்கும்:-)
      சொற்பொழிவின் கடைசியில் பூனைக்கும் குரங்குக்கும் இடையே 
போட்டி வைத்தேன்.
      வாக்களிப்பில் பூனையே வென்றது.
      அதாவது மார்ஜாரக் கிசோர நியாயமே கூட்டத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


No comments:

Post a Comment