Monday, July 8, 2013

காசு, பணம் துட்டு....



காசு 
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியர் காசு 
இதை ஆனை அச்சு என்றும் அழைத்தார்கள்
கிபி 1251 - 1293



பணம்

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய ஒரு பணம் என்னும் அரைக்கால் ரூபாய்


துட்டு

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய முக்கால் துட்டு, அரைத் துட்டு, 
கால் துட்டு நாணயங்கள்.
முக்கால் துட்டு என்பது காலணா
கால் துட்டு என்பது தம்பிடி அல்லது சல்லி

கீழே இவற்றிற்கான விளக்கம் கொண்ட அகத்தியர் குழு மடல்!

"காசு, பணம், துட்டு, Money, Money......"
இவற்றில் காசு, பணம், துட்டு ஆகியவை இப்போது பணம் என்ற பொருளைப் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக இருக்கின்றன. 
ஆனால் இவை மூன்றுமே வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் நாட்டில் 
வழங்கிய, குறிப்பிட்ட மதிப்புக்கொண்ட currency நாணயங்களாக இருந்தவை. 
இவற்றில் 'காசு' என்பது மிகவும் பழைமையானது. ஒரு கால கட்டத்தில் இது பொன்னால் ஆகிய நாணயமாக விளங்கியது. 
பாண்டியர்கள் காலத்தில் ஒரு பொற்காசுவுக்கு 12000 வெற்றிலைகள் 
வாங்கலாம்.
பிற்காலத்தில் காசு என்பது ஒரு செப்பு நாணயமாக விளங்கியது. அப்போது அதன் மதிப்பும் குறைந்துவிட்டது. 
"காக்காசுப் பெறாத விஷயம்" என்ற சொல்வழக்குக்கு இடம் கொடுத்தது. 
கால்க்காசு என்பது மிகச் சிறிய நாணயமாக விளங்கியது.
'பணம்' என்பது பழங்காலத்தில் ஒரு பொன் நாணயமாக இருந்தது. 
பிற்காலத்தில் வெள்ளி நாணயமாக விளங்கியது. 
இது ஒரு வெள்ளி ரூபாயில் எட்டில் ஒரு பங்காக இருந்தது. 
'அணா' நாணயக் கணக்கு புழக்கத்துக்கு வந்தபோது ஒரு சிறிய வெள்ளிக்காசாக விளங்கியது. அது இரண்டு அணா மதிப்புப் பெற்றதாக இருந்தது. அரைக்கால் ரூபாய் என்றும் சொல்வார்கள்.
சிறிய வெள்ளி நாணயம். 
இதற்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. 
சம்பந்தப்புரம், மாமன் மச்சான் முறை கொண்டவர்களைத் திருமணத்துக்கு அழைக்கும்போது ஒரு தாம்பாளத்தில் வெள்ளிப் பணத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து பத்திரிக்கை வைத்து மரியாதையாக அழைப்புக்கொடுப்பார்கள்.
இதைப் 'பணம் பாக்கு வைத்தல்' என்பார்கள்.
இதை வாங்கியவர்கள் கட்டாயமாக திருமணத்துக்குச் சென்று ஒரு மஞ்சள் துணியில் அதே வெள்ளிப் பணத்தை வைத்து முடிச்சுப்போட்டு அதை மாப்பிள்ளை அல்லது பெண்ணின் மணிக்கட்டில் கட்டி விடுவார்கள். 
இதைக் 'கங்காணம் கட்டுதல்' என்பார்கள்.
இதிலெல்லாம் அந்தக் காலத்தில் ஏதாவது சச்சரவு வந்தது உண்டு.
'துட்டு' என்பது முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் புழங்க ஆரம்பித்து ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் ஆட்சியின் ஆரம்பகாலம் வரைக்கும் இருந்தது.
அப்போது ரூபாய், அணா, பைசா என்னும் கரென்ஸி இந்தியாவின் அதிகாரபூர்வமான கரென்ஸியாக விளங்கியது. 
அந்த வரிசையில் 'துட்டு' என்பதும் கொஞ்ச காலம் இருந்தது. 
ஓர் அணாவில் மூன்றில் ஒரு பங்கு. அந்த நாணய வரிசையில் மிகச் சிறிய மதிப்புக் கொண்டதாக ஒரு சல்லி, அல்லது தம்பிடி விளங்கியது. பன்னிரண்டு தம்பிடி கொண்டது ஓர் அணா. 192 சல்லி/தம்பிடி கொண்டது ஒரு ரூபாய். ஒரு துட்டுக்கு நான்கு சல்லி. 
காலணாவுக்கு மூன்று சல்லி. காலணா என்பது முக்கால் துட்டுக்குச் சமம். 
ஆகவே காலணாவை 'முக்காத் துட்டு' என்றே பெரும்பாலும் குறிப்பிட்டார்கள்.
"காத்துட்டுக்குப் பிரயோசனமில்லை", "தம்பிடிக்கு ஆகாத வேலை", 
"சல்லித்தனம்", "சல்லிப்பயல்" என்ற சொல்வழக்குகள் எல்லாம் 
இருந்திருக்கின்றன.


                                   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Friday, July 5, 2013

CHINESE HAWKER'S TECHNIC


நிர்வாக இயலும் சீனச் சிற்றுண்டிச் சில்லறை ஸ்டாலும்
மலேசியாவின் ஜனத்தொகையில் 35 சதவிகிதம் சீனர்கள். இவர்கள் 
மலாயாவின் எல்லா பாகங்களிலும் சமமாகப் பரவியிருக்கவில்லை. சில இடங்களில் சில ஊர்களில் அதிகமாக இருப்பார்கள். பல இடங்களில் மிகக் குறைவாகவே காணப்படுவார்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் Food Court என்னும் சாப்பாட்டு மையங்கள் இருக்கும். ஒரு சதுரமான சதுக்கத்தின் ஓரங்களில் பல குட்டிக் குட்டிக் கடைகள். அவை உண்மையிலேயே சக்கரமில்லாத வண்டிகளின் மீது அமைந்தவை. 







அதை ஸ்டால் என்று சொல்லக்கூட முடியாத அளவுக்குச் சிறிய வண்டி. 
அந்த வண்டிக்குக் கூரை இருக்கும். அந்தக் கூரைக்குக் கீழே ஒரு சிறிய கண்ணாடி அலமாரி இருக்கும். அதில் ஒரே ஒரு தட்டுத்தான். அந்த ஸ்டால் காரன் எந்தவிதமான உண்டிகளைத் தயார் செய்கிறானோ, அவற்றிற்கான கச்சாப் பொருட்கள் அதில் இருக்கும். 
வண்டியின் பக்கவாட்டில் ஓர் அடுப்பு. அடுப்புக்குப் பக்கத்தில் கேஸ் டாங்க். அடுப்பின் மீது க்வாலி எனப்படும் பெரிய இருப்பு வாணலி. உண்டியில் சேர்க்கப்படும் சில பொருட்களை அவித்துப் போடவேண்டும். அதற்காகத் 'தள புள தள புள' என்று ஒரு பெரிய அலுமினியப் பானையில் சூப் கொதித்துக் கொண்டிருக்கும். சோயா முளை போன்றவற்றை ஒரு பெரிய வடிகட்டியில் வைத்துக்கொண்டு, அந்தத் 'தளபுள' சூப்பிற்குள் இட்டு எடுப்பான்.
Food-Court-களில் கை கழுவும் இடம் இருக்கும். சில ·பூட்-கோர்ட்டுகளில் 
கழிவறையும் இருக்கும். 
இந்த மாதிரியான சீனச் சிறு சில்லறை வியாபாரிகளை Hawkers என்று அழைப்பார்கள்.



பீஹூன் கோரேங்


மீ கோரேங்


க்வேய்த்தியாவ் கோரேங்
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான உண்டிகளைத் தயார் செய்து விற்பார்கள். மீ கோரேங் எனப்படும் பாஸ்ட்டா மாதிரிப்பட்ட உண்டியைச் செய்பவன் அதைத்தான் செய்வான். க்வெய்த்தியாவ் செய்பவன் அதைத்தான் செய்வான். 
ஒவ்வொரு ஹாக்கரும் சிலவகை உண்டிகளை மட்டுமே செய்வான். 
இது ஒரு ஸப்-ஸ்பெஷலைஸேஷன். பலவற்றைச் செய்து உலப்பிக் 
கொண்டிருக்க மாட்டான். அவன் செய்யும் அந்த மீகோரேங் அவனுக்கே 
உரியதாகவும் தனித்தன்மை பொருந்தியதாகவும் இருக்கும். நம்ம மதுரை 
வெங்கலக் கடைத் தெரு பாண்டியன் ஹோட்டல் புறா வறுவல், அம்சவல்லி பவன் பிரியாணி மாதிரி.
இன்னொரு ஸ்பெஷியாலிட்டி...... அவனவன் செய்யும் உண்டிகளுக்குத் தேவையான சேர்மானப் பொருட்களை மட்டுமே வைத்திருப்பான். ஒவ்வொரு நாளும் எத்தனை மீகோரேங் செலாவணி ஆகிறதோ, அதற்கேற்ற எண்ணிக்கை முட்டை, கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை வைத்திருப்பான். வெள்ளைப்பூண்டு உரிக்கப்பட்டு ஸைஸாக வெட்டப்பட்டிருக்கும். அதுபோலவே வெங்காயம், தோ·பூ என்னும் ஸோயா கேக் எல்லாமே. 
ஒரு குறிப்பிட்ட ஹாக்கர் மீ கோரேங், பீஹ¥ன் கோரேங், க்வெய்த்தியாவ் கோரேங் போடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் எதை அதிகமாகச் செய்கிறானோ அந்த உண்டிக்கு உரிய சேர்மானக் கூட்டுப் பொருட்கள்தான் கைக்கு எட்டிய தூரத்தில் குறிப்பிட்ட இடங்களில் சுற்றிலும் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பிடி, ஒவ்வொரு சிட்டிகை, ஒவ்வொரு கரண்டி... இப்படி எடுத்துப் போடமுடியும். எதையும் 
தடவிக்கொண்டோ தேடிக்கொண்டோ இருக்கமாட்டான்.
மிக விரைவாக அவனுக்கு வரும் ஆர்டர்களுக்கு உண்டிகளைச் செய்துகொடுத்துவிடுவான்.
Time Management, Efficient Service முதலியவற்றைத் தன்னகத்தே 
கொண்ட டெக்னிக்கைத்தான் நாங்கள் Chinese Hawker's Technic என்று 
குறிப்பிடுகிறோம். 
மலேசியாவில் உள்ள Management Training-இல் இதையும் சொல்லிக்
கொடுக்கிறார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$